ஞாயிறு, 16 அக்டோபர், 2011

தினம் அழுது தீர்த்தும் வற்றிய பாடில்லை இந்த கண்ணீர்...

முகப்புத்தகத்தில் வந்தாய் - விண்ணப்பம் செய்தாய்..
மற்றோருக்கு முகம் திருப்பும் நான் - சத்தமின்றி உன் விண்ணப்பத்தை ஏற்றேன்..
அரட்டைக்கு வந்தாய், ஹாய் என்றாய் - யாருக்கும் பதில் அனுப்பாத நான் உனக்கு ஹலோ என்றேன்..
எடுத்த எடுப்பிலேயே டார்லிங் என்றாய் - வெறுப்பு வர வில்லை எனக்கு உன் மேல்..
வாடி போடி என யாருமே என்னை அழைக்காத வண்ணம் உரிமையுடன் அழைத்தாய் - வேண்டாம் என்று சொல்லத்தோனவில்லை எனக்கு..
உன்னை காதலிக்கிறேன் என்றாய் - வெட்கமின்றி சம்மதித்தேன்..
கண்ணழகு, குழலழகு, சிரிப்பழகு, செவி அழகு என்றாய் - பல்லை இளித்தேன்
அட பல்வரிசை கூட என்னைப்போலவே என்றாய்..
சொல்ல வார்த்தை இல்லை - உறைந்து நின்றேன்..
அன்று தான் பெண்மை எய்தியது போல் உணர்ந்தேன் - வெட்கத்தில் உடம்பு கூசியது அது நம் முதல் சந்திப்பு...
அருகில் வந்து "லட்டு" என்றாய் - அந்த வார்த்தையில் ஆதிகால பெண்ணாய் மாறினேன்...
உன்னை பெயர் சொல்லி அழைக்கவும் என் நா கூசியது..
என் பெயரை சொல்லுடி என்றாய் - முடியாது என்றேன்..
அடியே கிறுக்கி என்றாய் - அது கூட பிடித்தது எனக்கு..
ஆசையாய் மாமா என்றேன் - அடி என் லட்டு என்றாய்..
நேரில் சந்திக்காமலே வளர்ந்தது நம் உறவு - முன் ஜென்ம பந்தம் என்றாய்..
உனக்காகவே பிறந்தேன் என்றாய் - பின் ஜென்மத்திலும் நீயே என் லட்டு என்றாய்..
நாட்களும் நகர்ந்தது - காதலும் வலுத்தது..
திடீரென ஓர் நாள் என் கண்முன்னே தோன்றி இன்ப அதிர்ச்சி தந்தாய் - அது நம் இரண்டாம் சந்திப்பு..
"ஏன் மாமா இவ்வளவு தூரம்" என்றேன் - அவசரப்பட்டு என் லட்டை திட்டினேனே மன்னிப்பு கேட்க ஓடி வந்தேன் என்றாய்..
மாமா என்று கண் கலங்கினேன் - லட்டு என்று நெற்றியில் முத்தமிட்டாய்..
வாடி காலார நடக்கலாம் என்றாய் - வேலையையும் மறந்து உன் பின் நாய் குட்டி போல் வந்தேன்..
வழியில் உன் அம்மா.............................................................................................
பயமின்றி என் தோளில் கை போட்டு இவள் தான் என் வருங்கால மனைவி என்றாய் - உன் தாய்க்கும் அதிர்ச்சி எனக்கு அதை விட...
மிகவும் பிடித்தது உன் தைரியம் - என் இதயத்தில் உச்சத்திற்கே சென்றாய்..
உன் தைரியத்தை மெச்சினேன் - அன்பு கூடியது காதல் வலுத்தது..
வாரம் ஒன்று கழிந்திருக்க - சிறுக சிறுக உணர்ந்தேன் உன் மாற்றத்தை..
வீட்டில் பிரச்சினை என்றாய் - வாழ்கை வெறுக்குது என்றாய்..
என்ன மாமா எனக்காக தானே என அழுதேன் நான் - என் உடலில் உயிர் உள்ள வரை உன் கண்களில் நீர் வர அனுமதிக்க மாட்டேன் என்றாய்..
நீ என்னுடன் இருந்தால் காலம் முழுவதும் உன் வாழ்வு - கண்ணீரில் கரையும் என்றாய்..
என்னுள் பூகம்பம் வெடித்தது - என் உயிர் சரிய ஆரம்பித்தது..
எப்பொழுதும் போல் மௌனமாக நீ சொன்னதற்கு செவி மடுத்தேன் - நீயே பேசினாய் நான் மௌனமாக கரைய ஆரம்பித்தேன்...
இது நடக்காது என்றாய் - என் உயிர் ஊசல் ஆடியது..
என்னை மறந்திடு என்றாய் - அதற்கு மட்டும் வாய் திறந்தேன் உங்கள் விருப்பம் மாமா என்று.....
நீ சந்தோஷமாய் இருக்கனும் என்றாய் - நீங்கள் இல்லாமல் எப்படி என்றேன்..
இருக்கணும்டி என ஆணையிட்டாய் - ஆமென்று தலை வணங்கினேன்..
தொலைபேசியை துண்டித்தாய் - என் சந்தோஷம் வேரோடு அறுந்தது..
உன் குரலின் அசரீரி இன்றும் கேட்கிறது............
உனக்கும் தெரியாமல் - உலகுக்கும் தெரியாமல்
இன்றும் நனைகிறது என் தலையணை - நீ விரும்பாத என் கண்ணீரில்..
மன்னித்து விடு மாமா உன் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை....
தினம் அழுது தீர்த்தும் வற்றியபாடில்லை என் கண்ணீர்...

சனி, 8 அக்டோபர், 2011

கற்பித்தல் என்பது - தொழிலா? சேவையா?

1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஐப்பசி மாதம் 5ம் திகதி உலகளாவிய ரீதியில் உலக ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது, என் தாய் திருநாடான இலங்கையில் 6 ம் திகதி கொண்டாடுவது வழமை. மாணவர்களுக்காக தங்களது வாழ்வையே அர்ப்பணித்த உண்மையான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இப்போது நாம் எமது பதிவிற்கு செல்லலாம்.

தற்கால கட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் உண்மையாகவே கற்றுக்கொடுக்க தகுதியானவர்களா?

ஆசிரியர்கள் என்று பாடசாலையில் இருக்கும் பொழுது நாம் எதற்கு எமது பிள்ளைகளை பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்புகின்றோம்?


நாம் கல்வி கற்கும் கால கட்டத்தில் உயர் தரம் படிக்கும் போது மட்டுமே பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றோம் ஆனால் இக்காலத்தில், 01 ம் வகுப்பிலிருக்கும் குழந்தை கூட பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்கிறதே?

எமது ஆசிரியர்கள் பட்டதாரிகள், அதை விட அனுபவம் மிக்கவர்கள், ஆனால் இப்பொழுது இருக்கும் ஆசிரியர்கள்? அவர்கள் உண்மையாகவே பட்டதாரிகள் தானா? அனுபவம் மிக்கவர்களா?

இவ்வாறான கேள்விகள் அடிக்கடி என் மனதில் எழுவதுண்டு. இதைப்பற்றி விரிவாக சிந்திக்கும் போது, தற்போது அதிகமான ஆசிரியர்கள் ஏதோ போக்குக்கு ஆசிரியர்களாக இருக்கிறார்களே தவிர, சேவையாக கருதி செயல்பட வில்லை என்பதே உண்மை. அது மட்டுமில்லாது பாடசாலை நேரங்களில் வீண் பேச்சு பேசுவதும், குழந்தைகளின் தகுதிகள், அறிவு மட்டம் என்பவற்றை விமர்சிப்பதற்கே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கின்றது, இதில் எங்கு பாடம் சொல்லிக்கொடுக்க நேரம் எஞ்ச போகின்றது?

ஆசிரியர்களைப்பற்றி குறை கூறவோ அவர்களை சாடவோ இல்லை, எனினும் என் மனதில் தோன்றும் ஆதங்கத்தை தான் கூறுகின்றேன். காரணம், முன்பு நாங்கள் எல்லாம் கல்வி கற்கும் போது எல்லா விதமான பாடங்களும் எங்களுக்கு பாடசாலையிலேயே கற்பிக்கப்படும், ஆனால் தற்பொழுது நிலைமை மாறி உள்ளது, பிள்ளைகள் பாடசாலையில் கற்பதை விட பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றால் தான் பரீட்சைகளில் சித்தி எய்த முடிகின்றது. இக்கருத்து நிரூபிக்கப்பட்டும் உள்ளது என்பது உண்மை. பார்க்கப்போனால் பல பிரத்தியேக வகுப்புகளில் அதே பாடசாலை ஆசிரியர்கள் தான் கற்பிக்கின்றார்கள், ஏன் இவர்களால் இதை பாடசாலையில் மட்டும் செய்ய முடியவில்லை????

இக்காலத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மிகவும் குறைவான தொகையே இருக்கின்றனர் என்பதும் உண்மை. இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பார்கள், அது போல் கனிஷ்ட வகுப்புகளில் இருக்கும் மாணவர்களுக்கு மிக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கற்பித்தலுக்கு அவசியம், ஆனால் இப்பொழுதோ சாதாரண தரம் கூட சித்தி எய்தாதவர்களே கனிஷ்ட வகுப்புகளுக்கு பெரும் பாலும் பாடம் சொல்லிக்கொடுக்கின்றர்கள் என்பது வருத்ததிற்குரிய விடயமே.

முன்னைய காலங்களில் சாதாரண தரத்தில் சித்தி எய்தல் என்பது மிக கடினமான விடயமாகும். ஆனால் தற்பொழுது உள்ள கல்வி முறைமையின் படி அடிமட்டத்தில் உள்ள ஒரு மாணவன்/ மாணவி கூட சாதாரண தரத்தில் சித்தி எய்தலாம், அவ்வாறான இலகுவான ஒரு பரீட்சையில் கூட சித்தி எய்தாதவர்கள், தனியார் துறையில் சென்று ஏதோ ஒரு பாடத்திட்டத்தை கற்றுக்கொண்டு அவர்கள் காசுக்காக கொடுக்கும் ஒரு சான்றிதழை வாங்கிக்கொண்டு வந்து ஆசிரியர்கள் எனும் பெயரில் மாணவர்களை பிரத்தியேக வகுப்புகளுக்கு போவதற்கு தூண்டுகோலாக இருக்கின்றனர்.

இன்னும் காலம் செல்ல செல்ல என்னவெல்லாம் நடக்குமோ என்று என்னும் போது சற்று பயமாகத்தான் உள்ளது, நமது குழந்தைகளின் தலைமுறையிலாவது இந்த நிலைமை மாறட்டும்..

தற்காலத்தில் ஆசிரியர்கள் என்பது, நாம் இன்று படிப்பதை நேற்றே படித்து தெரிந்து கொண்டவர் என்று எங்கோ படித்த ஞாபகம். அது உண்மை தான் போலும்.. :)

இந்த பதிவில் நான் யாரையும் சாடவோ குறை கூறவோ இல்லை, ஆனால் தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம். இருந்தாலும் கற்பித்தலை சேவையாக மதித்து செயல்படுபவர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் (௦.1 % மட்டும்).